125-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர் போர்வை உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை


125-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் அரசு சார்பில் மலர் போர்வை உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 6 Jun 2020 4:30 AM IST (Updated: 6 Jun 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

காயிதே மில்லத் 125-வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை,

காயிதே மில்லத் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி மலர் போர்வை போர்த்தியும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள். அரசியல், சமூகம், தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டு உரிமை ஆகிய அனைத்துக்கும் வழிகாட்டும் தலைவராக வாழ்ந்தவர் அவர். மக்களவை, மாநிலங்களவை, தமிழக சட்டமன்றம் என அனைத்திலும் உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவருடனும் அன்பும், கொள்கையும் கலந்த நட்புடன் இருந்தவர். 1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க அண்ணாவுக்கு தோழ்கொடுத்த தோழர். இஸ்லாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என்ற கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தவர். காயிதேமில்லத் கட்டிக்காத்த மதநல்லிணக்கம், சிறுபான்மையினர் நலன், மொழிப்பற்று, இனப்பற்று கொண்டவர்களாக நாம் அனைவரும் செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது வீட்டில் காயிதே மில்லத் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.நவாஸ், சிறுபான்மைத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் மற்றும் ஞானவேல் ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘காயிதேமில்லத்தின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, அவர் தேசத்துக்கு ஆற்றிய பணிகளையும் பங்களிப்பையும் நினைவுகூறுவோம். அவருக்கு இந்நாளில் நமது நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குவோம். இன்றைய இளந்தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவரின் போற்றுதலுக்குரிய அரசியல் நாகரிகமும், எத்தகைய நெருக்கடியிலும் வழுவாத, நழுவாத கொள்கை உறுதியும் ஆகும்’ என்று கூறியுள்ளார்.

Next Story