காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி - முதல்வர் உத்தரவு
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவவீரர மதியழகன் உயிரிழந்துள்ளார்.
சென்னை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இதனை அடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார்.
இதனை அடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story