எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? அரசு விளக்கம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? அரசு விளக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2020 3:45 AM IST (Updated: 7 Jun 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும் தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* தேர்வு மையத்துக்கு வரும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை ‘தெர்மல் ஸ்கிரீனிங்’ கொண்டு அவர்களுடைய உடல்நிலை வெப்பத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும்.பரிசோதிக்கும் சம்பந்தப்பட்டவரின் தோல் மீது அந்த தெர்மா மீட்டர் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி ஆகும். சில ஆய்வுகள் 97 டிகிரி முதல் 99 டிகிரி வரை இருக்கலாம் என்று கூறுகிறது. எனவே 99 டிகிரிக்கு (37.2 செல்சியஸ்) மேல் உடல் வெப்பம் ஒரு மாணவருக்கு இருந்தால் அவரை சற்று அமரவைத்து சாந்தப்படுத்த வேண்டும். பின்னர் 2-வது முறை அவருடைய உடல் வெப்பத்தை பார்க்கவேண்டும். அப்போதும் அவருடைய உடல் வெப்பம் 99 டிகிரிக்கு மேல் இருந்தால், அந்த மாணவருக்கு வேறு ஏதாவது அறிகுறி இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கவேண்டும். காய்ச்சலுக்கான அறிகுறி இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது.

* 2-வது முறையிலும் உடல்வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 4 பிரிவுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். அதாவது, 1) வெளிப்படையாக காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் வீட்டுக்கோ அல்லது மருத்துவமனைக்கோ ஒருவர் உதவியுடன் அனுப்ப வேண்டும். 2) இன்புளூயன்சா காய்ச்சல் இருந்தும், கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால் அந்த மாணவர் விருப்பத்துடன் மற்ற மாணவர்களுடன் தொடர்பில்லாமல் தனி அறையில் வைத்து எழுத அனுமதிக்கலாம். 3) இன்புளூயன்சா காய்ச்சல் இருந்து, கொரோனா தொற்று இருந்தால் அவரை வீட்டுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். துணைத்தேர்வுகள் எழுதிக்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். 4) எந்த அறிகுறியும் இல்லாமல் உடல்வெப்பம் இருந்தால் அந்த மாணவர் தேர்வு எழுத விரும்பினால், தனி அறை ஏற்படுத்திக்கொடுத்து ஆரோக்கியமான மாணவர்களுடன் தொடர்பில் இல்லாதபடி தேர்வுஎழுத அனுமதிக்கலாம்.

* இன்புளூயன்சா காய்ச்சல் இருந்து தனிஅறையில் தேர்வுஎழுதும் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை தனி கவரில் போட்டு முத்திரையிட்டு கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும்.

* பொதுத்தேர்வுக்காக பயன்படுத்தும் தனியார் பஸ்கள் ஒவ்வொரு முறையும் மாணவர்களை இறக்கிவிட்ட பிறகு சுத்தம் செய்ய வேண்டும். யாருக்காவது இருமல், சளி இருந்தால் அவர்களை பஸ்களில் ஏற அனுமதிக்கக்கூடாது. பஸ்சில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். கூட்டமாக பஸ்களில் ஏறக்கூடாது. அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும்.

* தேர்வு மையத்துக்கு வந்து, வீட்டுக்கு திரும்பும்வரை அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் பொதுத்தேர்வு எழுத சென்று வருவதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு பஸ் வசதிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக மாவட்டந்தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுடைய மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தேவையான பஸ்கள் எவ்வளவு?, என்னென்ன வழித்தடங்களில் பஸ்கள் தேவை? போன்ற விவரங்களை 8-ந்தேதிக்குள் (நாளை) கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் அந்த விவரங்களை அந்தந்த பகுதி போக்குவரத்து கழக மேலாளருக்கும் தெரிவிக்கவேண்டும். பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்ட உடன் அந்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அந்த பஸ்களில் தேர்வுபணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் பயணிக்கலாம். ஆசிரியர்கள் தங்களுடைய அடையாள அட்டையையும், மாணவர்கள் அடையாள அட்டையுடன், ஹால் டிக்கெட்டையும் கட்டாயம் வைத்திருக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story