சென்னையில் கொரோனாவை தடுக்க நுண்ணிய செயல் திட்டம் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பங்கஜ்குமார் பன்சால் நியமனம் - தமிழக அரசு உத்தரவு


சென்னையில் கொரோனாவை தடுக்க நுண்ணிய செயல் திட்டம் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பங்கஜ்குமார் பன்சால் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2020 4:00 AM IST (Updated: 8 Jun 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா தடுப்பு நுண்ணிய செயல் திட்டம் தயாரித்து செயல்படுத்துவதற்காக மாநகராட்சியின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ்குமார் பன்சாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மேலாண்மை செய்வதற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட களப்பணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சென்னையில் கொரோனா தடுப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் மாநகராட்சியின் சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் சிறப்பாக மேலாண்மை செய்யப்படுவதையும், மருத்துவ பரிசோதனைகள், தொற்றுகளை தடமறிதல், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நிர்வாகம் ஆகியவற்றுக்கான களப்பணிக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

சென்னையில் சில மண்டலங்களில் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுபோன்ற அதிக அபாயமுள்ள மண்டலங்களை கண்டறிவதோடு அங்கு தொற்று தடுப்பு மேலாண்மையை உறுதி செய்வதற்கான நுண்ணிய செயல் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவது அவசியமாக உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் அதிக அபாய மண்டலங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த மண்டலங்களில் கொரோனா தொற்று தடுப்பு மேலாண்மையை உறுதி செய்வதற்கான நுண்ணிய செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அதை சம்பந்தப்பட்ட களப்பணிக் குழுக்கள் செயல்படுத்தும்.

அதற்காக நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சாலை சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிடுகிறது. இவர் நுண்ணிய செயல் திட்டம் தயாரித்து அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்.

அவர் மாநகராட்சியில் இருந்து, அந்த பணிகளை ஆய்வு செய்து தினமும் தலைமை செயலாளருக்கு அறிக்கை தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story