ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை
திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆரம்பத்தில் 90 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்ததடுத்த நாட்களில் அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையானது 40 சதவீதமாக குறைந்தது. இதனைத்தொடர்ந்து அவரின் உடலானது வெண்டிலேட்டர் உதவியில்லாமல் படிப்படியாகத் தேறி வந்தது.
இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் இழந்தார்.
எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்.எல்.ஏ டிடிவி தினகரன் வெளியிட்டு உள்ள இரங்கலில்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.
கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டு உள்ள இரங்கலில்.
ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு மட்டும் இழப்பு அல்ல; ஜனநாயகத்திற்கும், பொதுவாழ்விற்கும் ஈடற்ற இழப்பு
அவரது குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த இயக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்து உள்ளார்.
திமுக எம்பி கனி மொழி வெளியிட்டு உள்ள இரங்கலில் திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மறைவு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என தெரிவித்து உள்ளார்.
மேலும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story