அதிகரிக்கும் கொரோனா: தமிழக பாதிப்பில் 70 சதவீதம் சென்னையில்...
ஒரேநாளில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் 426 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு 3000-ஐ கடந்துள்ளது.
சென்னை
தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 1927 தொற்றுகளில், சென்னையில் 1404 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 சதவிகிதம் ஆகும்.
சென்னையில், ஒரே நாளில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 223 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 213 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 213 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று மண்டலங்களில் ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக, தேனாம்பேட்டையில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.
அண்ணாநகரில் 184 பேரும், கோடம்பாக்கம் 149 பேரும், திரு.வி.க.நகரில் 105 பேரும், அடையாறு 70 பேரும், அம்பத்தூரில் 53 பேரும், மாதவரத்தில் 42 பேரும், திருவொற்றியூரில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆலந்தூரில் 38 பேரும், சோழிங்கநல்லூரில் 34 பேரும், வளசரவாக்கத்தில் 34 பேரும், பெருங்குடியில் 31 பேரும், மணலியில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ராயபுரம் - 4405
தண்டையார்பேட்டை - 3405
தேனாம்பேட்டை - 3069
கோடம்பாக்கம் - 2805
திரு.வி.க.நகர் - 2456
அண்ணா நகர் - 2362
அடையாறு - 1481
வளசரவாக்கம் - 1170
திருவொற்றியூர் - 972
அம்பத்தூர் - 901
மாதவரம் - 724
ஆலந்தூர் - 521
பெருங்குடி - 481
சோழிங்கநல்லூர் - 469
மணலி - 383
ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இதுவரை 258 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
இதில், அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 54 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளோரின் எண்ணிக்கை 12,507 ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 12,839 ஆக இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.15 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.84 சதவிகிதத்தினரும், திருநங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பினால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்று உறுதியானால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்டு அடைக்கப்படுகிறது. இவ்வாறாக சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிலும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78 பகுதிகளும் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் சென்னை மாநகராட்சி, இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story