10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2020 9:30 PM GMT (Updated: 2020-06-11T23:52:46+05:30)

10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு சுமார் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள மார்க்கெட்டை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முயற்சி எடுக்கப்பட்டபோது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குரிய அனைத்து ஆலோசனைகளையும் செய்த பிறகு தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என்று முதல்- அமைச்சர் அறிவித்தார். இதில் காலாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், அரையாண்டு தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் நிலை குறித்து பரிசீலனை செய்து அறிவிக்கப்படும். அதேபோல் காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது. இதுபோன்ற பல்வேறு குறைகள் குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

நூலகம் திறப்பு குறித்தும் முதல்-அமைச்சர் அறிவிப்பார். பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் ஆய்வு நடத்தி முதல்- அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு முடிவு எடுக்கப்படும். கோவில்களை திறப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிப்பார். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story