மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 11 Jun 2020 10:27 PM GMT (Updated: 2020-06-12T03:57:49+05:30)

மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் உடனடியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோல திராவிடர் கழகம் உள்ளிட்ட வேறு சிலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டை அணுகும்படி நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு, அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அதேபோல, மருத்துவ மேற்படிப்புக்களுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். ஆனால் இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில், 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுப்பதால், இப்பிரிவு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால் கூட, நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 197 இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 50 சதவீத இடங்களான 430 இடங்களை பெற தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போது, தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களை தவிர, பிற மருத்துவ கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story