சென்னையில் தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்


சென்னையில் தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 12 Jun 2020 5:01 PM IST (Updated: 12 Jun 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புகள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிகுறி எதுவும் இன்றி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதில் சிலர் அவர்களின் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் எழுந்தன. அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்துதலையும் மீறி வெளியில் செல்லும் போது பிற நபர்களும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் அவர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் கொரோனா மையங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story