டாக்டர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்


டாக்டர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 13 Jun 2020 4:30 AM IST (Updated: 13 Jun 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பீலா ராஜேசை இடமாற்றம் செய்து, மீண்டும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்து உள்ளது.

சென்னை,

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மறு உத்தரவு வரும்வரை அவர் வருவாய் நிர்வாக ஆணையராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் (வயது 53), இயற்கை பேரிடர்களின் போது சிறப்பாக பணியாற்றிய நிபுணத்துவம் பெற்றவர். பல பேரிடர் காலகட்டங்களில் அவரையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு நியமித்துள்ளது.

கும்பகோணம் தீ விபத்து, கஜா புயல் போன்ற பேரிடர் காலகட்டங்களில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை அந்தந்த பகுதிகளில் அரசு அனுப்பி வைத்து மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியது.

சுனாமி பணிகள்

அவர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தை சுனாமி பேரலைகள் தாக்கி உருக்குலைத்தன. அந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் ஆற்றிய பணி அலாதியானது.

அவரது பணிகளை ஐ.நா. சபையின் சிறப்பு தூதராக இருந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வெகுவாக பாராட்டினார். சுனாமி நிவாரணப் பணிகளுக்காக அவரையும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயரையும் இலங்கை அரசு அழைத்திருந்தது.

அமெரிக்காவின் அழைப்பு

தமிழகத்தில் மேற்கொண்ட சுனாமி நிவாரணப் பணிகள் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும், அமெரிக்காவில் பேரிடர் காலத்தில் எவ்வாறு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறியவும், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார்.

அங்குள்ள வாஷிங்டன், புளோரிடா, சியாட்டில், சான்பிரான்சிஸ்கோ, ஹவாய் போன்ற இடங்களுக்குச் சென்று பல கருத்தரங்கில் உரையாற்றி இருக்கிறார்.

மீண்டும் கிடைத்த பதவி

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரின் போது அவர் ஆற்றிய மீட்புப் பணி அளப்பரியது. தற்போது சென்னையில் கொரோ னா தொற்று அதிகமாக பரவி வருவதையடுத்து, சென்னை மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை அரசு நியமித்துள்ளது.

தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் 2012-19-ம் வரை 7 ஆண்டுகள் செயலாளராக அவர் பணியாற்றியிருந்தார்.

அங்கிருந்து வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஓராண்டிலேயே, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் முதன்மைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story