தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் -அமைச்சர் டி.ஜெயக்குமார்


தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் -அமைச்சர் டி.ஜெயக்குமார்
x
தினத்தந்தி 13 Jun 2020 5:45 AM IST (Updated: 13 Jun 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை,

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்ற 40-வது கூட்டம் 12-ந் தேதி (நேற்று) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அதில் கலந்து கொண்டார்.

2017-18-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஐ.ஜி.எஸ்.டி. தொகை ரூ.4,073 கோடியை விரைந்து வழங்கிட வேண்டும். 2018-19-ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.553.01 கோடி மற்றும் 2019-2020-ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.1,101.61 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

உணவு தானியங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் உறுதிமொழி பத்திரத்தை காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் போது அதனை பொறுத்தருள வேண்டி மன்றத்தின் பரிசீலனைக்காக அமைச்சர் ஏற்கனவே ஒரு கருத்துருவை முன் வைத்திருந்தார். வணிகர்களின் நலன் கருதி அதன் மீது சாதகமான முடிவை உடனே எடுக்க இந்த கூட்டத்தின்போது அமைச்சர் வலியுறுத்தினார்.

விலை உயர்வு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்போன், உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு கொண்டுள்ளன. இதனால் தொழில் புரிவோர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வரி திருப்புத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை சீர் செய்யும் விதமாக ‘பிட்மெண்ட்’ குழுவின் பரிந்துரைகள் இந்தக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டன.

உரம், துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது, விலை உயர்வை ஏற்படுத்திவிடும் என்பதால், அவை ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் கூறினார்.

வரி விலக்கு கோரிக்கை

வணிகப் பிரதிநிதிகள், வணிக சங்கங்கள் மற்றும் பிற வணிக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள், மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி சேவைகள், சிட் நிதி தொடர்பான சேவைகள் மற்றும் ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம், நெல் குற்றுகை சேவைகள் ஆகியவற்றிற்கு வரி விலக்களித்தல், நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு, பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கோரினார்.

மேலும், ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்களின் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story