மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jun 2020 11:30 PM GMT (Updated: 13 Jun 2020 7:18 PM GMT)

இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருக்கும் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருப்பதுடன் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா கட்சியும் உறுதியாக இருக்கிறது. சமூகநீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது என்று பா.ஜனதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருப்பது, ஆச்சரியம் அளித்தாலும், மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மேலும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பாஸ்வான், சமூகநீதிக் கொள்கையின்பால் தொடர்ந்து காட்டிவரும் ஈடுபாட்டின் காரணமாக, “இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்“ என்றும்; “இடஒதுக்கீடு அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை“ என்றும் ஆணித்தரமாக அறிவித்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.

அடிப்படை உரிமை

தமிழ்நாட்டில் தி.மு.க., தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து எழுப்பிய சமூகநீதி லட்சிய முழக்கம், தேசிய அளவில் எதிரொலித்திருப்பது, இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டிடும் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் முதற்கட்ட வெற்றி ஆகும். இடஒதுக்கீடு என்பது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதை மத்திய பா.ஜ.க. அரசு இப்போதாவது உணர வேண்டும்; உணர்ந்து, உண்மையான அணுகுமுறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஏற்கனவே இருக்கின்ற இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடங் களை வழங்கிட வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் கோரிக்கை.

371 இடங்கள் மட்டும்

ஆனால், சமூகநீதியைத் தரம் தாழ்த்திடும் விதத்தில் மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள 9 ஆயிரத்து 550 முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 371 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்து இருக்கிறது. இது சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

எனவே நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்து விட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட ரீதியான சமூகநீதியை நிலைநாட்டிட மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் இளநிலை (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஆணையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜனதா தேசியத் தலைவர் நட்டா அவர் கள் வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story