ஏ.டி.எம். மையத்தில் தீ; ரூ.42 லட்சம் தப்பியது


ஏ.டி.எம். மையத்தில் தீ; ரூ.42 லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 15 Jun 2020 12:34 AM IST (Updated: 15 Jun 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், அங்கு எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.42 லட்சம் தப்பியது.

சேலம்,

சேலம் காந்தி ரோடு பிரிவு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே மெயின் ரோட்டில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணம் எடுப்பது மற்றும் பணம் டெபாசிட் செய்வது என 4 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை வெளியேறியது. இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து கொண்டிருந்த சிலர் அலறியடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.42 லட்சம் தப்பியது

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம் மையத்துக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் பிடித்த தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் அங்கிருந்த 4 ஏ.சி. எந்திரங்கள் மற்றும் மேற்கூரை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.42 லட்சம் தப்பியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் தீ விபத்து தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story