கீழடியில் அகழாய்வு பணி: புதிதாக 2 மண்பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு


கீழடியில் அகழாய்வு பணி: புதிதாக 2 மண்பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 9:30 PM GMT (Updated: 15 Jun 2020 7:00 PM GMT)

கீழடியில் அகழாய்வு பணியில் புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர புதிதாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும்புகள் மற்றும் சிறிய பொருட்கள் எடுக்கப்பட்டன.

கூடுதல் குழிகள்

அகரத்தில் கவிழ்ந்த நிலையில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story