புதிய திருப்பம் : 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புகார் தெரிவித்தவர்களுக்கு பேரவை செயலர் கடிதம்


புதிய திருப்பம் : 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புகார் தெரிவித்தவர்களுக்கு பேரவை செயலர் கடிதம்
x
தினத்தந்தி 16 Jun 2020 7:12 AM IST (Updated: 16 Jun 2020 4:16 PM IST)
t-max-icont-min-icon

11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும்  அவர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். 

ஆனால், பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தது.  இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு க்கடிதம் அனுப்பி உள்ளார். அதில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என அதில் கூறி உள்ளார்

இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்,பார்த்திபன், எஸ்.ராஜா, முருகுமாறன் பேரவை செயலாளர் சீனிவாசன்  கடிதம் எழுதி உள்ளார்.

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Next Story