பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Jun 2020 5:45 AM IST (Updated: 18 Jun 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘நீட்‘ தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தயாராகும் விதமாக இலவச பயிற்சி வகுப்பு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 சிறப்பு மையங்களில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில், தற்போது நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு ஏற்கனவே பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அளித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு, அதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான ஆன்-லைன் கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட, ‘இ-பாக்ஸ்‘ என்ற நிறுவனத்துடன் பள்ளிக்கல்வி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ஆன்-லைன் பயிற்சி வகுப்புகளுக்கான சோதனை ஓட்டம் நடந்தது.

எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமை செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆன்-லைன் பயிற்சி வகுப்புக்கு இதுவரை 7 ஆயிரத்து 420 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

4 மணி நேரம் பயிற்சி

இ-பாக்ஸ் நிறுவனத்தால் ஆன்-லைன் மூலமாக ஒவ்வொரு நாளும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு தலா ஒரு மணி நேரம் வீதம், 4 மணி நேர பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி முடிந்தவுடன் அன்றையதினமே ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு மணி நேரம் வீதம், 4 மணிநேர பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரரித் தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வேலை வாய்ப்பு இணையதளம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ( Ta-m-il Nadu Pr-iv-ate Job po-rt-al ( www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in ) என்ற இணையதளத்தை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறலாம். இதற்காக தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும், அக்காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்யும்.

வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவைகள், கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story