மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Jun 2020 12:00 AM GMT (Updated: 17 Jun 2020 9:10 PM GMT)

மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும் என்பதால் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,  

இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசு, திரைமறைவில் அந்த வகுப்புகளைத் தாராளமாக அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்து, அதில் ஆசிரியர்களையும், பெற்றோரையும், மாணவர் பிரதிநிதிகளையும் புறக்கணித்திருக்கிறது.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள 4.4 சதவீத வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன என்றும், கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 42 சதவீதம் பேருக்கும் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மடிக்கணினிகளை 11 சதவீதம் பேரும், ஸ்மார்ட் போனை 24 சதவீதம் பேரும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த அறிக்கை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது!

அடிப்படைக் கட்டமைப்பு

2020-21-ம் கல்வியாண்டிற்குரிய பாடத்திட்டங்கள் குறித்துப் பரிந்துரைக்க அ.தி.மு.க. அரசு அமைத்துள்ள குழு இன்னும் தனது அறிக்கையை அளிக்கவில்லை. அக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டங்களுக்குத் தேவையான இணையவழிப் பொருளடக்கங்கள் என்ன? அந்தப் பொருளடக்கம் உள்ள மென்பொருள் உட்கட்டமைப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் இருக்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்படவில்லை.

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு, கையடக்க மடிக்கணினி (டேப்) வழங்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை அதுவும் நடைபெறவில்லை. அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி இணைப்பு இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொலைக்காட்சி அனைத்து இல்லங்களிலும் தெரியுமா? என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு அரசிடமும் இல்லை.

அனுமதி அளிக்க கூடாது

இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் அலைபேசித் திரை அல்லது மடிக்கணினித் திரையைப் பார்ப்பதால் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். மேலும் பெற்றோருக்கு தாங்க முடியாத நிதிச்சுமையாக இணையவழிக் கல்வி நெருக்கடியைத் தரும்.

இணையவழிக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களும், பெற்றோர்களும் முக்கியப் பங்குதாரர்கள். ஆகவே இதனால் ஏற்படும் கலாசாரச் சீரழிவுகள், ஆபத்துகள், டிஜிட்டல் உட்கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்துக் கேட்க வேண்டும்.

இணையவழி உட்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டில், நேரடியாகக் கற்றல், கற்பித்தல் என்ற வகுப்பறைச் சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை. எனவே இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story