கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை 5 நாட்களில் குணமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்து இருக்கிறார்.
சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 3 வகையான சித்த மருந்து கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கொரோனா தடுப்பு மருந்தாகவும், குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அம்மருந்துகளை பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த 160 பேரும், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகளும் இதுவரை இல்லாத வகையில் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இந்த செயல் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. மாறாக கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தமிழக அரசு இணைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story