சென்னையில் ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


சென்னையில் ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Jun 2020 10:00 PM IST (Updated: 19 Jun 2020 10:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கூடுதலாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்படும்.  மக்களின் தேவையற்ற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது.  இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்தது.  9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரும் என மொத்தம் 49 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 625 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுவரை 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்து உள்ளது.  சென்னையில் கூடுதலாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story