கொரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு விடுதியை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம்


கொரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு விடுதியை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம்
x
தினத்தந்தி 22 Jun 2020 3:00 AM IST (Updated: 22 Jun 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்துக்கு விடுதியை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்தநிலையில், அதற்கு சில பரிந்துரைகளை மாநகராட்சியிடம் துணைவேந்தர் சூரப்பா முன்வைத்துள்ளார்.

சென்னை, 

-கொரோனா நோய்த்தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும்நிலையில், பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு கல்லூரி விடுதிகள், அறைகள் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்படுகின்றன.

அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதலாக இடம் தேவைப்படுவதால், ஆராய்ச்சி மாணவர்களின் விடுதிகளை ஒப்படைக்க மாநகராட்சி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டது. ஆனால் அதற்கு பதிலாக ஆடிட்டோரியத்தை ஒப்படைப்பதாக பல்கலைக்கழகம் கூறியது.

இருப்பினும் மாநகராட்சி தொடர்ந்து விடுதியை கேட்டு வந்தநிலையில், அதனை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதித்து இருக்கிறது. ஆனால் அதற்கு சில பரிந்துரைகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மாநகராட்சிக்கு முன்வைத்துள்ளார்.

மாநகராட்சி செய்து தரவேண்டும்

அதில், ‘மாணவர் விடுதியில் உள்ள பொருட்களை மாணவர்களோ அல்லது அவர்களின் பாதுகாவலர்களோ வந்து எடுப்பதற்கும், மீண்டும் அவர்கள் பாதுகாப்பாக தங்களுடைய வீடுகளுக்கு திரும்புவதற்கும் உரிய ஏற்பாடுகளை, மாநகராட்சி செய்து தரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா தனிமைப்படுத்தும் முகாமாக அண்ணா பல்கலைக்கழக கட்டிடங்களை பயன்படுத்திய பிறகு, எதிர்கால பயன்பாட்டுக்காக முறையாக சுத்தப்படுத்தி மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் மாநகராட்சியிடம் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திடம் மாநகராட்சி கூடுதல்இடம் கேட்டதற்கிணங்க, நேற்று ஒரு கட்டிடத்தை பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. தேவை மேலும் இருக்கும்பட்சத்தில் தான், ஆராய்ச்சி மாணவர்களின் விடுதிகளை பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சியிடம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story