4 மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லைப் - ஐகோர்ட்டில், மின்சார கழகம் பதில் மனு தாக்கல்


4 மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லைப் - ஐகோர்ட்டில், மின்சார கழகம் பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 23 Jun 2020 2:30 AM IST (Updated: 23 Jun 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மொத்தமாக மின்சார ஊழியர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக வரும் கட்டணத்தைவிட மிக அதிக தொகை செலுத்த வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். எனவே 2 மாதங்களாக பிரித்து மின்சார பயன்பாட்டை கணக்கிட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

மின் கட்டணம் கணக்கீடுவது எப்படி?

இதனடிப்படையில் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் நிதி கட்டுப்பாட்டாளர் சவீதா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 1.75 கோடி வீட்டு உபயோக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் 2 மாதங்களில் 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தால் அதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

200 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2-ம், 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50-ம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ம், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

29-ந்தேதி விசாரணை

ஊரடங்கினால் மார்ச் மாதம் எடுக்க வேண்டிய மின்சார பயன்பாட்டு அளவை ஊழியர்கள் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முந்தைய மாதங்களில் அந்த நுகர்வோர் பயன்படுத்தி அளவை கணக்கிடுவது வழக்கும். இதற்கு உதாரணமாக, ஒரு நுகர்வோர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் 480 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளார். எனவே, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர் பயன்படுத்தியதாக 480 யூனிட் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 1,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அதில்

பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு 480 யூனிட் கழித்துவிட்டு, மீதமுள்ள 760 யூனிட் மின்சாரத்தை ஏப்ரல், மே மாதங்களில் பயன்படுத்தியதாக கணக்கிட்டு, அவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின் கட்டணம் நிர்ணயம் செய்ததில் விதிமீறல் இல்லை. மேலும் கட்டணம் செலுத்த கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Next Story