மின் கட்டணம் செலுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அவகாசம் - ஐகோர்ட்டில், மின்சார கழகம் தகவல்


மின் கட்டணம் செலுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அவகாசம் - ஐகோர்ட்டில், மின்சார கழகம் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2020 1:15 AM IST (Updated: 24 Jun 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டணம் செலுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில், மின்சார கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக முழுவதும் மின் கட்டணம் செலுத்த பொதுமக்களுக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

மின் கட்டணம் செலுத்தாத வீடு மற்றும் தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த வருகிற ஜூலை 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்களை பொருத்தமட்டில், ஏற்கனவே ஜூன் 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது. ஜூன் 15-ந்தேதி வரை 75 சதவீதம் நுகர்வோர் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்’ என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story