வரலாறு காணாத உச்சம்-ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை


வரலாறு காணாத உச்சம்-ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை கடந்து விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2020 10:13 PM GMT (Updated: 24 Jun 2020 10:13 PM GMT)

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி நேற்று விற்பனை ஆனது.

சென்னை, 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டி நேற்று விற்பனை ஆனது.

தங்கம் விலை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு மாதமும் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரம் என்ற நிலையில் விற்பனை ஆனது.

அதன்பின்னர், விலை மளமளவென உயர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.35 ஆயிரம், ரூ.36 ஆயிரம் என்ற நிலைகளை தாண்டியது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் விலை இருந்து, தற்போது ரூ.37 ஆயிரத்தையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.


நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 610-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.49-ம், பவுனுக்கு ரூ.392-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 659-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 272-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து இருக்கிறது. தங்கம் விலை கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு பவுன் ரூ.27 ஆயிரம் என்று இருந்தது. அதன்பின்னர், விலை உச்சத்தை நோக்கி சென்று 10 மாதங்களில் பவுனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது, வெள்ளி விலையும் உயரும். ஆனால் நேற்று வெள்ளி விலை குறைந்திருந்தது. கிராமுக்கு 10 காசும், கிலோவுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு கிராம் 53 ரூபாய் 50 காசுக்கும், கிலோ ரூ.53 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், ‘அமெரிக்காவில் பெடரல் வங்கிகளின் கூட்டமைப்பு கூட்டம் நடக்க உள்ளது. அதில் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் கூட்டப்பட்டால் மட்டுமே தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வட்டிவிகிதம் கூட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதுதவிர பெருமுதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, கடந்த சில மாதங்களாக தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். இந்த காரணங்களால் தான் விலை உயருகிறது. வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது’ என்றார்.

Next Story