கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு- போலீஸ் கமிஷனர் பேட்டி


கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு- போலீஸ் கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2020 11:30 PM GMT (Updated: 25 Jun 2020 8:51 PM GMT)

கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி.காலனியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இல்லம் உள்ளது. அவரது வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்குமாறு அவர்கள் தரப்பில் கேட்கவில்லை. எனினும் தற்போது அவரது வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து 7 நாட்கள் ஆகிவிட்டது.

முடிவடைய இன்னும் 5 நாட்கள் உள்ளது. இதுவரை இந்த ஊரடங்கில் பொதுமக்கள் நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 36 ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள் மீது இதுவரை 16,192 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

வடசென்னையில் கமாண்டோ வீரர்கள் அணிவகுத்து சென்றது கொடி அணிவகுப்பு இல்லை. தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. எனவே அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. வீடு, வீடாக சென்று பொருட் களை வழங்குபவர்கள் ஒரே இடத்தில் 20 பேர் வரை தங்கி உள்ளனர். அதுபோல் ஒரே இடத்தில் தங்கி இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பத்திரிக்கையாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை நேற்று வழங்கினார். சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் கலந்து கொண்டார்.

Next Story