தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு


தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 25 Jun 2020 11:45 PM GMT (Updated: 25 Jun 2020 8:56 PM GMT)

கொரானாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

சென்னை, 

தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க காணொலி கூட்டம் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியிலிருந்தப்படி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஹவில்தார் பழனி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ததை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியதுடன், கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில் இந்திய நாட்டினுடைய ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய அவசரநிலைப் பிரகடனத்தை பற்றி நினைவு கூர்ந்தார்.

மேலும் அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கம் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு இந்த ஓராண்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், பெருவாரியானவற்றை நிறைவேற்றி உள்ளது.

நாடு கொரானாவினால் தற்போது சந்தித்து வரும் அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது. மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

தமிழக அரசுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி பங்களிப்பை செய்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசாங்கத்தின் சாதனைகளை மக்களிடம் பா.ஜ.க. தொண்டர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story