மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: 29-ந்தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை


மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: 29-ந்தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 26 Jun 2020 7:39 AM GMT (Updated: 26 Jun 2020 7:39 AM GMT)

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 29-ந்தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை: 

சீனாவில் உள்ள உகான் நகரில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் 200 நாடுகளில் பரவி, அனைவரையும் வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது. 

இந்தியாவில், கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் வருகிற 30 ஆம் தேதி வரையும் 5 கட்டங்களாக ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் 3 மாதம் முடிவடைகிறது.ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. 

நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலாளரைத் தலைவராக கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு தாங்கள் ஆய்வு செய்த அடிப்படையிலான முடிவுகளை வைத்து முதல்வர், சுகாதார அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும்.

தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கும் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பரவியுள்ளது. சென்னை தவிர வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்புவோரால் கொரோனா தொற்று மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கூடுதலாக சோதனை செய்வதால் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15-ம் தேதி ஆலோசனை நடத்தி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோன்று தென் மாவட்டங்களில் தொற்று அதிகமாவதை அடுத்து மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பரவுவதை அடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.


Next Story