திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 26 Jun 2020 10:20 AM GMT (Updated: 26 Jun 2020 10:20 AM GMT)

திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி,

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இன்று பேசும்பொழுது, திருச்சி மாவட்டத்தில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.  திருச்சியில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜூன்12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு நல்ல தீர்வை பெற்று தந்தது.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.  குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  குடிமராமத்து திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

திருச்சி முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டில் நடந்து வந்தன.  எனினும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  இதனால் இந்த பணிகள் தற்காலிகம் ஆக நிறுத்தப்பட்டு இருந்தன.  இந்நிலையில், திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Next Story