அதிக விலைக்கு மது விற்ற9,319 ஊழியர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் தகவல்


அதிக விலைக்கு மது விற்ற9,319 ஊழியர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2020 10:30 PM GMT (Updated: 26 Jun 2020 9:05 PM GMT)

அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு 9,319 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை, 

அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு 9,319 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் குல்லுபடையாச்சி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மதுபானங்களின் விலைப்பட்டியல் கடைகளில் வைக்கப்படுவதில்லை. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் அளிக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படியே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருத்திய விலைப்பட்டியல் விவரங்கள் மதுபானக்கடைகளில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை. மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 319 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story