மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி: நன்கொடை விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படுகிறது-ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு + "||" + Chief Minister General Relief Fund: Donation Details Disclosed Transparently

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி: நன்கொடை விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படுகிறது-ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி: நன்கொடை விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படுகிறது-ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி: நன்கொடை விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படுகிறது என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பெறப்படும் நன்கொடை விவரங்களை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அனைத்து விவரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாளர்கள் பலர் நிதியளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு நன்கொடை வந்துள்ளது? அதன்மூலம் எவ்வளவு பயனாளிகள் பயனடைந்துள்ளனர்? போன்ற விவரங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.

அரசின் இணையதளத்தில் மார்ச் மாதம் ரூ.20.47 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்களில் ரூ. 306.42 லட்சம் கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு உரிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் நிதித்துறை துணைச் செயலர் பரிமளாசெல்வி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

கெரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிவாரண நிதிக்காக பொதுமக்கள், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் நிதியளித்து உதவி செய்தவர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சிலர் அரசின் சேமிப்பு கணக்கு, வரைவோலை, காசோலை மற்றும் இணையவழி ‘ஆன்லைன்’ சேவை நிறுவனங்கள் மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர். இவை அனைத்தையும் மொத்தமாக ஒருங்கிணைத்து தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இணையதளத்தில் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.10 லட்சத்துக்கும் மேலாக நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் முதல்-அமைச்சர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான விவரங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட தொகை அனைத்தும் மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டு கொரோனா வைபரஸ் தடுப்பு முழு கவச உடைகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கவும், சுகாதார மேம்பாட்டுக்காவும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் வழங்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருவதால் இதுதொடர்பான முழுமையான விவரங்களை இணையதளத்தில் வெளியிட தாமதம் ஏற்பட்டு வருகிறது. மற்றபடி இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்படும் நன்கொடைகள் தொடர்பான விவரங்கள் அவ்வப்போது வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.