குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தகவல்


குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2020 11:30 PM GMT (Updated: 27 Jun 2020 11:30 PM GMT)

குலேசகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் உள்ளன என்று ‘இஸ்ரோ‘ தலைவர் கே.சிவன் கூறினார்.

சென்னை, 

‘இஸ்ரோ‘ தலைவரும், விண்வெளித்துறை செயலாளருமான கே.சிவன் காணொலிகாட்சி மூலம் சென்னை பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விண்வெளி துறையின் பயன்பாடுகள் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. சீர்திருத்தம் செய்வதுடன், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகரும்போது விண்வெளி துறையின் சேவைகளை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்கு ‘இஸ்ரோ‘வை மட்டுமே சார்ந்து இருந்தால் போதாது. தனியார் துறையினரும் விண்வெளித்துறையில் ஈடுபட தயாராக இருப்பதால் அவர்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் விண்வெளித்துறை பொருளாதாரத்தில் 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. நம் நாட்டின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் பெரும் பங்கைப் பெறுவதற்கும் தனியார் ஈடுபாடு அவசியமாகிறது.

தனியார் துறையினர் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வணிக அடிப்படையில் பொதுமக்களுக்கு சேவையை வழங்க சிறிய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறோம். அதேபோல் மாநில அரசுகளும் தானாக முன்வந்து முயற்சித்தால் அவர்களையும் இணைத்து செயல்பட தயாராக உள்ளோம்.

‘இஸ்ரோ‘விற்கு பாதிப்பு இல்லை

செயற்கைகோள் மற்றும் ராக்கெட் ஏவுவதை சொந்தமாக வைத்துக்கொண்டு விண்வெளி சேவைகளை வழங்க முடியும். ஆனால் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. தனியார் துறையினரை ஈடுபடுத்தினாலும், தனியார் துறையினர் ‘இஸ்ரோ‘வின் பணிகளை செய்யமாட்டார்கள். இதனால் ‘இஸ்ரோ‘ வேலைகளில் எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படாது.

ககன்யான் திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சில தொழில்நுட்பங்களை மட்டும் தனியார் உருவாக்ககுவதற்காக இஸ்ரோ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் சில தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும். ஆதித்யா திட்டத்துக்கான செயற்கைகோள் தயாராக உள்ளது. ஆனால் தற்போது வாய்ப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் பணிகளில் தனியார் துறையினர் எங்களுடன் சேரவேண்டும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ககன்யான் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

குலசேகரப்பட்டினம் ஏவுதளம்

‘இஸ்ரோ‘ தன்னுடைய 2-வது ஏவுதளத்தை தமிழகத்தில் உள்ள குலேசகரப்பட்டினத்தில் அமைத்து வருகிறது. மாநில அரசு இதற்கான நிலத்தை கையப்படுத்தி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும், குலசேகரப்பட்டிணத்தில் அமைக்கும் ஏவுதளத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஆனால் குலேசகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் ராக்கெட்டுக்கு எரிபொருள் தேவை குறைவு, எளிதாக புவிவட்டப்பாதையை அடைவது போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.

விண்ணில் ஏவுவதற்கு பல செயற்கைக்கோள்கள் தயாராகி வருகின்றன. நிலைமை சீரடைய காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story