சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய நீதிபதிகள்


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய நீதிபதிகள்
x
தினத்தந்தி 28 Jun 2020 7:44 AM GMT (Updated: 28 Jun 2020 7:44 AM GMT)

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணையை தொடங்கினார்.

சாத்தான்குளம், 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்  உயிரிழந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா கிளைச் சிறையில் விசாரணை மேற்கொண்டார். நேற்றிரவு எட்டரை மணிவரை விசாரணை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அதன்பின்னர் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தட்டச்சு இயந்திரங்களுடன் பணியாளர்களும் கிளை சிறைக்குள் விசாரணைக்காக சென்றனர்.

சிறையில் உள்ள கைதிகள்,  சிறை காவலர்கள், சிறை உதவி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மேலும், சிறையில் உள்ள ஆவணங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ள காட்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டு சேகரித்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணையை தொடங்கி உள்ளார். 


Next Story