கொரோனா பாதிப்பு விவகாரம்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்


கொரோனா பாதிப்பு விவகாரம்; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 29 Jun 2020 12:00 AM GMT (Updated: 28 Jun 2020 9:48 PM GMT)

கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடைப் பூங்கா பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதற்கட்டமாக, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.82.13 கோடியிலும், கால்நடை மற்றும் விலங்கின ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடியிலும், இந்த கால்நடை பூங்காவுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக ரூ. 270 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா. இதில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலக கட்டிடம், 8 கல்விசார் வளாகம், நூலக கட்டிடம், மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, 2 விடுதி காப்பாளர் குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை என 20 கட்டிடங்களுக்கான பணிகள் மொத்தமாக 3,72,473 சதுர அடி பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கால்நடை பூங்காவில் நாட்டின மாடுகள், நாட்டின நாய் இனங்கள் மற்றும் நாட்டுக்கோழி இனங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:- கொரோனா தொற்று பாதிப்பினால் அதிகாரிகள், காவல் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் எந்த ஆலோசனையையும் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறாரே?

பதில்:- கொரோனா வைரஸ் தொற்று நோயினால் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சரியான முறையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணத்தினால்தான் நமது மாநிலத்தில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. சரியான மருத்துவ சிகிச்சை அளித்ததன் காரணத்தினால், பெரும்பாலானோர் குணமடைந்து இருக்கின்றனர். அரசை பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும். அதற்காக அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குணமடையச் செய்வதுதான் எங்களது தலையாய கடமை. அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- கொரோனா தொற்று விஷயத்தில் அரசியல் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறாரே?

பதில்:- தினந்தோறும் அரசை பற்றியும், முதல்- அமைச்சரை பற்றியும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். வீட்டுக்குள் அறையிலேயே இருக்கிறார். இவர் எங்காவது வெளியில் போயிருக்கிறாரா? ஏதோ ஒரு நாள், 2 நாட்கள் சென்று பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் காட்டிவிட்டு வந்துவிட்டார்.

நாங்கள் அப்படியல்ல. நான், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிபிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தங்களால் இயன்றவரை பாதிக்கப்பட்ட மக்களை குணமடையச் செய்வதில் அக்கறை செலுத்தி, மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்குண்டான முயற்சிகளை எடுத்து வருகிறோம். எனவே, அரசை பொறுத்தவரை, நோய் தடுப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

கேள்வி:- இந்த ஒரு வாரத்தில் காவல் துறை தாக்குதல் தொடர்பாக 5 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன, காவல்துறைக்கு ஏதாவது அறிவுரை வழங்கியிருக்கிறீர்களா?

பதில்:- ஏற்கனவே காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடத்திலும், வியாபாரிகளிடத்திலும் அன்பாகப் பழக வேண்டும், அன்பாக நடந்துகொள்ள வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையில்லாமல் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கேள்வி:- ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

பதில்:- நாளையதினம் (அதாவது இன்று) மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் கூறும் ஆலோசனைகளைப் பொறுத்துத்தான் அரசு முடிவு செய்யும்.

கேள்வி:- கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செல்வதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?

பதில்:- நகர வங்கியை எடுத்திருக்கிறார்கள். மற்ற வங்கிகளையெல்லாம் எடுக்கவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story