சென்னையில் கொரோனாவுக்கு தினமும் 1,800 பேர் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


சென்னையில் கொரோனாவுக்கு தினமும் 1,800 பேர் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 8:03 AM GMT (Updated: 29 Jun 2020 8:03 AM GMT)

தினமும் சராசரியாக 1,800 பேர் பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சை குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை: 

சென்னையில் ஜூன் மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தினமும் சராசரியாக ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிகிச்சை குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 20 நாட்களில் சிகிச்சை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48.32  சதவீதத்தில் இருந்து 60.05 சதவீதமாக அதிகரித்துள்ளது குணமடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிகிச்சையில்  இருப்பவர்கள் எண்ணிக்கை 50.72 சதவீதத்தில் இருந்து 38.45 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 0.96 சதவீதமாக இருந்த உயிரிழப்பு தற்போது 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் கண்டறியப்பட்டு வரும் நிலையில், குணமடைந்து  வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரேனா பாதிப்பு குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலத்தை சேர்ந்த 2,739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தேனாம்பேட்டையில்  2,296 பேரும்,  ராயபுரத்தில் 2,153 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கத்தில் 2,137 பேரும்,  தண்டையார்பேட்டையில் 1,990 பேரும்,  திரு.வி.க.நகரில் 1,561 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அடையாறில் 1,377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story