மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Curfew extension in Tamil Nadu with restrictions and relaxation till 31st July

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 5-ந் தேதி வரைமுழு ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 5-வது தடவையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது.


இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நோய்த் தொற்று பரவல் வேகமாக அதிகரித்ததால் கடந்த 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. என்றாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30-ந் தேதி (இன்று) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள், தளர்வுகள்

மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும், கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள்.

ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிப்பு

பல்வேறு தினங்களில் முதல்-அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக கடந்த 22-ந் தேதி நடத்தப்பட்ட காணொலி காட்சியில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், நேற்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-ந் தேதியுடன் (இன்று) முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

சென்னை, மதுரையில் முழு ஊரடங்கு

எனினும், முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் 19.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 (இன்று) இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும்.

காய்கறி, பழக்கடைகள்

19.6.2020-க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 12 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும்.

அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020-க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 12 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி, பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பஸ்போக்குவரத்து நிறுத்தம்

* மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

* அந்தந்த மாவட்டத்திற்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இபாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

* முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் ஜூன் 30-ந் தேதிவரை (இன்று) வழங்கப்பட்ட இபாஸ் ஜூலை 5-ந் தேதிவரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.

* ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

வழிபாட்டு தலங்கள்

* நகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

* மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

ஓட்டல்கள்

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீடிக்கிறது. ஆனாலும் மருத்துவத் துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தடை நீடிக்கிறது. ஆனாலும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை, மெட்ரோ ரெயில், மின்சார ரெயிலுக்கான தடை நீடிக்கும்.

திரையரங்குகள்

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றபடி, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

* திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளின்படி, திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

சென்னை தவிர மற்ற பகுதிகள்

* சென்னை தவிர மற்ற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) ஜூலை 1-ந் தேதியில் (நாளை) இருந்தும்; காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் உள்ள முழு ஊரடங்குக்கு உட்பட்ட பகுதிகளில், 6-ந் தேதியில் இருந்தும் சில பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. என்றாலும், 20 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பெரிய கடைகள்

* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது.

* தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

* தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீத அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இறைச்சிக் கடைகள்

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாவும் அனுமதிக்கப்படுகிறது. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் அனுமதிக்கப்படுகிறது.

* பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தொழிற்சாலைகள்

* ஜூலை 5-ந் தேதிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளைப் பொருத்தவரை தற்போதுள்ள நடைமுறை அதாவது, தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு பணிபுரிய அனுமதிக்கும் நடைமுறை தொடர்வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள இபாஸ் முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள், அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிவதற்கு, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து அனுமதி பெற்று தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் என்றும், கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பாக ரூ.5 ஆயிரம், அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது - தலைமைச் செயலாளர் பேட்டி
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார்.