மாநில செய்திகள்

தமிழர்களை அழைத்து வரும் எத்தனை விமானங்களுக்கு அனுமதி? - இன்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு + "||" + How many flights to Tamils are allowed? - High Court orders the government to file the report today

தமிழர்களை அழைத்து வரும் எத்தனை விமானங்களுக்கு அனுமதி? - இன்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழர்களை அழைத்து வரும் எத்தனை விமானங்களுக்கு அனுமதி? - இன்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து தமிழர்களை அழைத்து வரும் எத்தனை விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இன்று(செவ்வாய்க்கிழமை) அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

“வெளி நாடுகளில் சிக்கிதவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அழைத்து வருகிறது. ஆனால் தமிழகத்துக்கு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை அழைத்து வர முடிவில்லை. எனவே தமிழக விமான நிலையங்களில் அந்த விமானங்கள் தரையிரங்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.“ என சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு விசாரணையின்போது, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எத்தனை பேர் இந்தியா திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனர்? அவர்கள் எத்தனை நாட்களுக்குள் அழைத்து வரப்படுவார்கள்? என்பது உள்பட பல கேள்விகளை ஐகோர்ட்டு எழுப்பியது. இதற்கு மத்திய அரசும் விளக்கமாக பதில் அளித்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், ‘வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘வந்தே பாரத் மிஷன்‘ என்ற திட்டத்தின் கீழ் விமானம் மூலம் அழைத்து வரும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு விமானம் மட்டுமே தரையிறங்க தமிழக அரசு அனுமதிக்கிறது. அதற்கு மேல் விமானங்களை தரையிறக்க தமிழக அரசு அனுமதி வழங்க மறுக்கிறது.

இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரும் விமானங்கள் அண்டை மாநிலங்களில் உள்ள விமானநிலையங்களில் தரையிறங்கப்படுகிறது. அங்கிருந்து சாலை வழியாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்‘ என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு கூறியது. ஆனால், தற்போது நாள்

ஒன்றுக்கு ஒரு விமானம் தரையிறங்க அனுமதிக்கிறது. வெளிநாடுகளில் 27 ஆயிரம் தமிழர்கள் சிக்கியுள்ளனர். ஒரு விமானம் மட்டும் தரையிறங்க தமிழக அரசு அனுமதித்தால், 27 ஆயிரம் பேரை அழைத்து வர 6 மாதங்கள் ஆகிவிடும். வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்‘ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தமிழக விமானநிலையங்களில் தரையிறங்க அனுமதி வழங்கப்படுகிறது. எத்தனை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும்‘ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (செவ்வாய்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.

அப்போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.