ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டி


ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2020 11:09 PM GMT (Updated: 29 Jun 2020 11:09 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் பேட்டி அளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

சென்னை,

5-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர இருப்பதையொட்டி, மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் உள்பட மேலும் சில நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மருத்துவ நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் டாக்டர்கள் பிரதீப் கவுர், வி.ராமசுப்பிரமணியம், குகானந்தம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது டாக்டர் பிரதீப் கவுர் கூறியதாவது:-

முந்தைய கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்த பரிந்துரைத்து இருந்தோம். அதை அரசு நடைமுறைப்படுத்தி சென்னையில் தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்துகிறது. இது நல்ல விஷயம். அதேபோல் தமிழகம் முழுவதும் தற்போது 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடந்து உள்ளது.

கடந்த 2 வாரங்களாக திருச்சி,மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உள்ளது. அதனால் சென்னையை போன்று, அந்த மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகப்படுத்தவேண்டும். நிறைய முகாம்கள் நடத்தி பரிசோதகைள்ன நடத்த வேண்டும்.

காய்ச்சல், சளி, மூச்சு வாங்குவது, மணம், சுவை தெரியாமல் இருப்பது என சில அறிகுறி இருந்தால் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை மையத்துக்கு சென்று சோதனை செய்து கொள்ளவேண்டும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்கிறார்கள். இதன்மூலம் கொரோனா நோயாளிகளை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்.

கொரோனா எண்ணிக்கை அதிகமாவதால் சிலர் பயப்படுகிறார்கள். பரிசோதனை அதிகரிக்கும்போது அதிக நோயாளிகள் வருவார்கள். நோயாளிகள் அதிகமாவதால் பயப்பட தேவையில்லை. மற்ற மாநிலங்களை காட்டிலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நம்முடைய நோக்கம் என்னவென்றால், உயிரிழப்பை குறைக்கவேண்டும்.

ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. தேவைப்படும்போது ஊரடங்கு செய்யவேண்டும். ஆனாலும், ஊரடங்கு எப்போதுமே தீர்வு கிடையாது. சென்னையில் ஊரடங்கு காரணமாக நோயாளிகளை எளிதில் கண்டறியமுடிந்தது. அதேநேரம் ஊரடங்கில் எப்போதும் இருக்க முடியாது.

அதன்பிறகு எந்தெந்த பகுதியில் அதிகமாகிறது என தெரிந்தால், அங்கு சில தளர்வுகளை குறைக்கலாம். எல்லா பகுதியிலும் ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. பொது போக்குவரத்தால் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறதாக கருதுகிறோம். அதனால் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கூட்டங்கள் கூடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் ‘ரேபிட் கிட் டெஸ்ட்‘ தேவையில்லை.

‘ஆர்.டி. பி.சி.ஆ.ர். டெஸ்ட்‘ நல்ல முறையில் இருக்கிறது. வேறு எந்த பரிசோதனையும் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

பொதுமக்களில் யாருக்காவது, கொரோனா தொற்று குறித்த ஒரு அறிகுறி இருந்தாலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடைசி இரண்டு, மூன்று வாரத்தில் கொரோனா நோயை குணப்படுத்த பல்வேறு புதிய மருந்துகள் அறிமுகமாகி உள்ளது. இந்த சிகிச்சை முறையை ஒழுங்குபடுத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரை செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த நோயை குறைப்பதற்கான அனைத்து வழிகளையும் அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறோம்.

பெரிய கோடாரியை எடுத்து ஒரு கொசுவை கொல்வது போல, ஊரடங்கு என்பது பெரிய ஆயுதம். ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், இப்போது மற்ற விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டும். ஊரடங்கை இன்னும் 6 மாதம் நீட்டிப்பது பிரயோஜனமில்லை. வேறு யுக்தியை நாம் உபயோகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதில் வேறு சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் குகானந்தம் கூறியதாவது:-

சென்னையைப் போன்று மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகப்படுத்த பரிந்துரைத்து இருக்கிறோம். ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் சமூக, பொருளாதார விஷயங்கள் இருப்பதால் இதை தொடர்ந்து நீட்டிக்க முடியாது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும்.

நோய்த் தொற்று அதிகமாகிறது என்பதை கண்டு பயப்படாமல், இறப்புகளை குறைக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய முக்கிய நோக்கம். நோயை குணப்படுத்த தேவையான உபகரணங்கள் தமிழக அரசிடம் உள்ளது. எல்லா மாவட்டங்கள் பற்றியும் சில தகவல்கள் கொடுத்து இருக்கிறோம். அரசு அதை வைத்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். இவ்வாறு டாக்டர் குகானந்தம் கூறினார்.

டாக்டர் பிரதீப் கவுர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில், மாவட்ட அளவிலான நிலவரங்களை (கொரானா தொற்று பரவல்) அடிப்படையாக கொண்டு தமிழக அரசு தளர்வுகள் அல்லது ஊரடங்கு முடிவுகளை எடுக்கலாம். மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கள நிலவரம் ஆகியவற்றை முடிவுகள் எடுக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story