சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு


சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jun 2020 9:29 AM GMT (Updated: 30 Jun 2020 9:29 AM GMT)

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 

இருவரின் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நிதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர். 

மேலும் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். 

மேலும், இந்த வழக்கில் ஒரு நொடிக்கூட வீணாகமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதிகள், அதுவரை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர்.

தற்போது வருவாய்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் இருந்து வருகிறது. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். 

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு நடத்தி வருகிறார். 

Next Story