மாநில செய்திகள்

தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு + "||" + CBCID investigates father-son death Action taken: Sub-Inspector of Police arrested 5 more policemen booked for murder case

தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு

தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு
தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை கைது செய்தனர். மேலும், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தந்தை-மகன் உயிரிழந்ததை கண்டித்து, வியாபாரிகள் மாநிலம் தழுவிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம், மவுன ஊர்வலம் நடத்தினர். தனது கணவர், மகன் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக, ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், மதுரை ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். ஆனால், விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு, ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தூத்துக்குடி அலுவலகத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். கோவில்பட்டியில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசில், அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மர்ம மரணம் என்று 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அனில்குமார், முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 12 குழுக்கள் களம் இறங்கியது. மொத்தம் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட குழுவினர் பல்வேறு இடங்களிலும் சென்று, ஒரே நேரத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

அதேபோன்று ஒரு குழுவினர், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதற்கிடையே,சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேற்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நகல், கோவில்பட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள் மாலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் நேற்று 2-வது நாளாக ஆய்வு நடத்தினர். அங்கு தந்தை-மகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து பதிவு செய்தனர்.

கோவில்பட்டி கிளை சிறையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாலையில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் ஊரடங்கை மீறியதாகவும், செல்போன் கடையை மூடாமல் தகராறு செய்ததாகவும் சாத்தான்குளம் போலீசார் தவறாக வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷை இரவில் போலீசார் கைது செய்தனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்
கதக், மைசூருவில் தந்தை, தாயை இழந்த நிலையில் துக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இரு மாணவிகள் எழுதிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
2. தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட 3 போலீசார் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்
சாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
3. தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத்தரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்
தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.