முதலமைச்சரின் கடமை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது; தந்தை-மகன் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை


முதலமைச்சரின் கடமை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது; தந்தை-மகன் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 3 July 2020 3:45 AM IST (Updated: 3 July 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், முதலமைச்சரின் கடமை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது, என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள், ஐகோர்ட்டு மதுரைக் கிளை தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டுவதாக இருக்கக்கூடாது. கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது. நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது.

பென்னிக்சும், ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, தமிழக முதல்-அமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார். இது ‘லாக்-அப் மரணமே அல்ல‘ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன் பங்குக்கு மற்றொரு தீர்ப்பைச் சொன்னார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை சாத்தான்குளம் போலீசார் மிரட்டினார்கள். மாஜிஸ்திரேட்டை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்தார்கள். மாஜிஸ்திரேட்டு துணிச்சலாக இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளருக்குப் புகார் கொடுத்தார்.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களாக ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நெருக்கடியான நிலையில் வேறு வழியில்லாமல் தான், இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக அரசு தள்ளப்பட்டது.

இத்தோடு கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. இந்த வழக்கின் நகர்வை மக்கள், அரசியல் கட்சிகல், பொதுநல அமைப்புகள், வணிகர்கள் என அனைவரும் கண்காணித்து கொண்டுதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

பிரெண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்புத் தரவேண்டும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது விசாரணைக்கு அனைவரும் மனப்பூர்வமாக ஒத்துழைப்புத் தர வேண்டும்.

இந்த வழக்கை முறையாக, சட்ட நெறிமுறைகளின்படி, நீதிநியாய வழிமுறைகள் எள்ளளவும் பிசகிடாமல் அரசு தீவிரமாக எடுத்து நடத்த வேண்டும். குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாக அவரோ மற்றவர்களோ கருதிக்கொள்ளக்கூடாது. கடமையும், பொறுப்பும் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story