சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை - இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை - இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2020 12:15 AM GMT (Updated: 2 July 2020 10:24 PM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய மேலும் 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, இந்த சம்பவம் பற்றி கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

அதன்பேரில், மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் கோவில்பட்டி கிளை சிறை மற்றும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தின்போது பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, தந்தை-மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய தாக்கியதாக சாட்சியம் அளித்தார்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

அதே நேரத்தில், விசாரணையின் போது போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் புகார் அளித்தார். இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

6 பேர் மீது கொலை வழக்கு

அதன் அடிப்படையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது, மரணம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

அதன்படி, இந்திய தண்டனை சட்டம் 302(கொலை), 341(அடைத்து வைத்தல்), 201(தடயங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ் ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு

முதலில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை நேற்று முன்தினம் இரவு கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 16-ந் தேதி வரை காவலில் வைக்க தலைமை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரகுகணேஷ் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 3 பேர் கைது

இதற்கிடையே, ஆத்தூரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் புதியம்புத்தூரில் இருந்த போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோரையும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனிப்படையினர் அடுத்தடுத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நெல்லையில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் தனிப்படையினர் அங்கு விரைந்தனர். இதை அறிந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து கார் மூலம் மதுரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக உள்ளூர் போலீசார் உதவியுடன் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை மடக்கி பிடித்து கைது செய்து தூத்துக்குடியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்

அங்கு 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய 3 பேரையும் நேற்று மாலை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர்.

கைதான மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ஹேமா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய 3 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேடுதல் வேட்டை

இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் முத்துராஜ் உள்ளிட்ட மேலும் 2 பேரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ்காரர் முத்துராஜின் சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும். அங்கு பூரணம்மாள் காலனியில் உள்ள அவரது உறவினர்களின் வீடுகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story