அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு - அறநிலையத்துறை பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு


அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு - அறநிலையத்துறை பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2020 2:30 AM IST (Updated: 4 July 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க கோரி ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடர்ந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

‘தினமலர்’ திருச்சி, வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்த ஊரடங்கில் கோவில்களும் மூடப்பட்டுள்ளது. கோவில் களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து, பெரும் சிரமத்தில் உள்ளனர்.

கோவில்கள் மூடப்பட்டாலும் அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோவிலுக்கு வந்து வழக்கம்போல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது. கோவிலுக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கோவில்கள் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 35 சதவீதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. மற்றொரு 35 சதவீதம் கோவில்களை பராமரிக்க செலவிடப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் உபரி நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையிடம் தற்போது 30 சதவீத உபரி நிதியாக

சுமார் ரூ.300 கோடி உள்ளது. ஊரடங்கு காலத்திலும் அறநிலையத்துறை ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த உபரி நிதியில் இருந்து அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. ஆனால், 2-வது தவணை நிவாரணத் தொகைக்கான பட்டியலில் ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் சேர்க்கவில்லை.

எனவே அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் போன்றவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் கடந்த மே 19-ந்தேதி ‘இ-மெயில்’ மூலம் முறையீட்டு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் கோரிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு மாதம் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆர்ஆர்.கோபால்ஜி சார்பில் வக்கீல் கவுசிக் ஆஜராகி வாதிட்டார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர்

கார்த்திகேயன், ‘பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை 2 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story