தந்தை- மகன் மரணமடைந்த வழக்கு: விசாரணையில் முன்னேற்றம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில்


தந்தை- மகன் மரணமடைந்த வழக்கு: விசாரணையில் முன்னேற்றம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில்
x
தினத்தந்தி 5 July 2020 3:15 AM IST (Updated: 5 July 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவிட்டதன் பேரிலேயே தந்தை -மகன் மரணமடைந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை உயிர்ப்பறிப்பு கொடூரத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருந்து கண்டனம் வெளிப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் சமூக வலைதளங்களில் காணொலியாகத் தங்களின் எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதிவுசெய்து வருகிறார்கள். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளேகூட, இந்தக் கொடூரத்தை அனுமதிக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்காலிகமாக மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க. அரசு ‘அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்துகொண்டு ஆட்சி செய்வதுபோல’, நீதிமன்றம் பாராட்டிவிட்டது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.

இப்போதுதான் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதுவும், எத்தனை நாட்கள் கழித்து? ஒரு வழக்கின் ஆரம்பத்தில் முழு உண்மையும் தெரிந்துவிடாது என்று முதல்-அமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது அறிக்கையிலேயே தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

முழு உண்மையும் தெரியாத நிலையில், அப்பா - மகன் இருவரில் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்தார் என்றும், இன்னொருவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் முதல்-அமைச்சரே முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது எப்படி?. நெஞ்சுவலியாலும், மூச்சுத்திணறி இறந்தவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலான முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மூச்சுத்திணறியும், நெஞ்சுவலியாலும் இறக்கின்றவர்களுக்கு முதல்-அமைச்சர் இதுவரை எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்?.

வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் முழு உண்மை தெரியாது என்கிறபோது, உங்களைப் போலவே உளறிக்கொட்டும் இன்னொரு அமைச்சரான கடம்பூர் ராஜூ, “இது லாக்கப் மரணமில்லை“ என்று தன் ‘முடிவை’ அறிவித்தது எப்படி? ஆணவமா?.

சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தன்னிச்சையாக விசாரித்து உத்தரவிட்டதன் பேரிலேயே தற்போதைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுப்பது உங்களுக்கு அரசியலாகத் தெரிகிறது என்றால், உங்கள் அரசியல் என்பது மக்களின் நியாயத்திற்கானதாக இல்லை.

தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார். முதல்-அமைச்சர் வழியிலேயே மற்ற அமைச்சர்களும் மமதையுடன் இருப்பதால் மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது. இதை எடுத்துச் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. மக்கள் செல்வாக்கு மிக்கவரும், தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்தவருமான தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதாரப்பூர்வமாக விடுக்கும் அறிக்கைக்குப் பதில் சொல்ல வக்கின்றி வகையின்றி அவதூறுகளை அள்ளி வீசுவது கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி, அவருடன் மாவட்ட அரசியலில் மல்லுக்கட்டுகின்ற அமைச்சர் பாண்டியராஜன் வரை எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது.

தி.மு.க. நீதியை நம்புகிற, எதிர்கொள்கிற இயக்கம். வாய்தா வாங்கி காலத்தை ஓட்டிய வரலாறு எங்களுக்கு கிடையாது. நேருக்கு நேராக எதிர்கொண்டு, பொய் வழக்குகளைப் பொடிப்பொடியாக்கியவர்கள்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரித்த மாஜிஸ்திரேட்டை அ.தி.மு.க. அரசின் ஏவல்துறையான காவல்துறையினர் மிரட்டியிருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நீதித்துறை நடுவரிடம் உண்மையைச் சொன்ன பெண் தலைமைக் காவலர் உயிர் பயத்தில் இருப்பதையும், ஒரு காவலருக்கே போலீஸ்காரர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பதையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை.

மக்களின் கோபத்திற்கும், கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்லத் திராணியின்றி, தி.மு.க. தலைவரை குறை சொல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story