அனைத்து வழக்குகளும் நாளை முதல் விசாரணை சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு


அனைத்து வழக்குகளும் நாளை முதல் விசாரணை சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 3:15 AM IST (Updated: 5 July 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

அவசர வழக்குகள் மட்டுமல்லாமல், எல்லா வகையான வழக்குகளையும் அனைத்து நீதிபதிகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் விசாரிப்பார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு வழக்கு விவர பட்டியலை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் நீதிமன்றங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டன.

சென்னை ஐகோர்ட்டை பொறுத்தவரை காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தன. இதனால் வக்கீல்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வழக்குகளையும் அனைத்து நீதிபதிகளும் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

இதற்காக நீதிபதிகள், ஐகோர்ட்டுக்கு வந்து தங்களது சேம்பரில் இருந்தும், கோர்ட்டு அறையில் இருந்தும் வழக்குகளை விசாரித்தனர். இதற்கிடையில் ஐகோர்ட்டு ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கும் தொற்று ஏற்பட்டதால், மீண்டும் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் ஐகோர்ட்டை திறக்க வேண்டும். அனைத்து வழக்குகளும் முன்பை போல மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். இதற்காக எந்த ஒரு நிபந்தனை விதித்தாலும் அதை வக்கீல்கள் ஏற்பார்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல் சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் விசாரணையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இடையூறுகள் ஏற்படுவதாகவும், தங்களால் திறம்பட வாதிட முடியவில்லை. எனவே வருகிற 6-ந்தேதி (நாளை) முதல் ஐகோர்ட்டு உள்பட அனைத்து நீதிமன்றங்களும் வழக்கம்போல செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் ஐகோர்ட்டு அனைத்து நீதிபதிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘நாளை (திங்கட்கிழமை) முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல், எல்லா வகையான வழக்குகளையும், அனைத்து நீதிபதிகளும் காணொலி காட்சி மூலம் விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இரு நீதிபதிகள் கொண்ட 6 அமர்வுகள், 27 தனி நீதிபதிகள் ஆகியோர் என்னென்ன வழக்குகளை விசாரிப்பார்கள்? என்ற விவர பட்டியலை ஐகோர்ட்டு பதிவுத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

Next Story