வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பருவகாற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. தொடர்ச்சியாக இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு 8-ந்தேதி வரை செல்லவேண்டாம் என்றும் ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘மாமல்லபுரம் 7 செ.மீ., திருக்கழுக்குன்றம் 6 செ.மீ., கேளம்பாக்கம், வந்தவாசி, மதுராந்தகம் தலா 5 செ.மீ., பெருங்களூர், திருப்பத்தூர், பட்டுக்கோட்டை, பெருந்துறை தலா 4 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story