ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை


ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 5 July 2020 3:32 AM GMT (Updated: 5 July 2020 3:44 AM GMT)

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் அங்குள்ள காவல் நிலையத்தில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கும் தொடர்பு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில்,  திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளில் தொடர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story