கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 7 July 2020 4:15 AM IST (Updated: 7 July 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 43 மருத்துவ துறைகள் சார்ந்த மூத்த இயக்குனர்களுடன், கொரோனா சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்வதற்கு பேட்டரி வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தார். கொரோனா வார்டில் தகவல் தொடர்புக்கு ‘வாக்கி டாக்கி’ முறையையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா பிரத்யேக சிகிச்சை பிரிவு 20 படுக்கை வசதியுடன் தொடங்கப்பட்டு தற்போது ஆயிரம் படுக்கை வசதியுடன் இயங்கி வருகிறது. இந்த எண்ணிக்கையை, 2 ஆயிரம் படுக்கை வசதியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு, ‘எக்ஸ்ரே‘ எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் நோயாளிகளுக்கு ‘சி.டி.ஸ்கேன்’ எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாள்பட்ட நோய்கள், புற்றுநோய் போன்ற பெரிய நோய்களுடன் கொரோனா பாதித்த பலரை இங்குள்ள டாக்டர்கள் குணப்படுத்தி உள்ளனர். மேலும் தீவிர அறிகுறியுடன் வருபவர்களை அழைத்து செல்ல நவீன பேட்டரி கார் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள புற்றுநோயை குணப்படுத்தும் ‘லினியர் ஆக்ஸிலேட்டர்’ கருவி மற்றும் ரூ.15 கோடி மதிப்புள்ள ‘பெட் ஸ்கேன்’ கருவி உள்ளிட்டவைகளை நாளை (இன்று) முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், யோகா மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சித்த டாக்டர்களுக்கும், தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து சென்று யோகா பயிற்சி அளிக்க அனுமதித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ‘டீன்’ டாக்டர் தேரனிராஜன், மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story