அரியலூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
அரியலூரில் ரூ.347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் செலவிட உள்ளது.
இதுவரை 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், 10-வது கல்லூரியாக ரூ.347 கோடி மதிப்பீட்டில் அரியலூரில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என முதல்வர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story