ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 July 2020 6:57 PM IST (Updated: 7 July 2020 6:57 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-

“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டியில் 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்கு சிடி ஸ்கேன், எக்ஸ் ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன. அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா மையம், டிவி பார்க்கும் வசதி, வைபை வசதி, நூலக வசதி உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன. தேவையான அளவு வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.

கொரோனாவுக்காக 518 அரசு, தனியார்  மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளது. சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் உள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு மூலமாக தொற்று குறைந்து வருகிறது. அரசு எடுத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் 57.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

தமிழகத்தில் இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. நோயை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

நோய் பரவலை தடுக்க வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை அளித்து வருகிறோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வரலாம்” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Next Story