தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது


தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது
x
தினத்தந்தி 7 July 2020 11:15 PM GMT (Updated: 7 July 2020 8:20 PM GMT)

தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கையை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னையிலும் தொற்று படிபடியாக குறைய தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 35 ஆயிரத்து 423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 180 பேர் ஆண்கள், 1,436 பேர் பெண்கள் ஆவார். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 209 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 447 முதியவர்களும் அடங்குவர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று 10 மாவட்டங்களில் 65 பேர் உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனையில் 45 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இறப்பு பட்டியலில் சென்னையில் 39 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் கொரோனா மொத்த உயிரிழப்பு 1,636 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 545 பேர் நேற்று குணம் அடைந்தார். இதுவரை 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 45 ஆயிரத்து 839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,203 பேரும், மதுரையில் 334 பேரும், விருதுநகரில் 253 பேரும், திருவள்ளூரில் 217 பேரும், நெல்லையில் 181 பேரும், தூத்துக்குடியில் 144 பேரும், ராணிப்பேட்டையில் 125 பேரும், கன்னியாகுமரியில் 119 பேரும், வேலூரில் 117 பேரும், காஞ்சீபுரத்தில் 106 பேரும், திருவண்ணாமலையில் 99 பேரும், தேனியில் 94 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும், கடலூரில் 65 பேரும், தென்காசியில் 62 பேரும், திருச்சியில் 55 பேரும், சேலத்தில் 52 பேரும், புதுக்கோட்டையில் 43 பேரும், திருப்பத்தூரில் 40 பேரும், கோவையில் 36 பேரும், தஞ்சாவூரில் 34 பேரும், கள்ளக்குறிச்சியில் 28 பேரும், திருவாரூரில் 23 பேரும், ராமநாதபுரத்தில் 22 பேரும், திருப்பூரில் 17 பேரும், சிவகங்கையில் 15 பேரும், திண்டுக்கலில் 7 பேரும், நாமக்கல், நீலகிரியில் தலா 5 பேரும், கரூர், நாகப்பட்டினம், தர்மபுரியில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரியில் இருவரும், விழுப்புரத்தில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் 50 அரசு நிறுவனங்கள், 46 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 96 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 13 லட்சத்து 52 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் குறைகிறது


சென்னையில் கடந்த ஜூன் 9-ந்தேதி 1,242 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் பாதிப்பு ஏறுமுகத்தில் சென்றது. அதிகபட்சமாக ஜூன் 30-ந்தேதி 2,393 ஆக எகிறியது. அதன்பின்னர் இறங்குமுகத்தை கண்டது. நேற்று பாதிப்பு 1,203 ஆக குறைந்தது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருவதை காண முடிகிறது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story