மின்சார சட்டவிதிகளை ஐகோர்ட்டில் மேற்கோள் காட்டி அளவுக்கு அதிகமாக மின்கட்டணம் வசூலிப்பது வேதனையாக இருக்கிறது - மு.க.ஸ்டாலின்


மின்சார சட்டவிதிகளை ஐகோர்ட்டில் மேற்கோள் காட்டி அளவுக்கு அதிகமாக மின்கட்டணம் வசூலிப்பது வேதனையாக இருக்கிறது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 July 2020 5:13 AM IST (Updated: 9 July 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

மின்சார சட்ட விதிகளை ஐகோர்ட்டில் மேற்கோள் காட்டி, பொதுமக்களிடம் அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிப்பது வேதனையாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, -

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது முந்தைய மின் கட்டணத்தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. அரசு, ஐகோர்ட்டில் தெரிவித்து, மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய யூனிட்டுகளை கழிக்காமல் செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால் தான் இந்த கட்டண உயர்வு பிரச்சினை என்பதை இன்னும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிக கொடுமையாக இருக்கிறது.

பேரிடரை காரணம் காட்டி டெண்டர் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கொள்முதல் செய்ய முடிகிற அரசுக்கு அதையே காரணம் காட்டி கட்டணத்தை ஏன் குறைக்க முடியவில்லை? அனைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கியதற்கு அரசு பிறப்பித்த ஊரடங்குதான் காரணமே தவிர, பிழைப்புத்தேடி வெளியில் செல்ல தயாராக இருந்த மக்கள் அல்ல. ஆகவே அரசின் உத்தரவால், முடங்கிப்போன மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது.

‘நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்‘ என்று அமைச்சரும், முதல்-அமைச்சரும் அரசு வக்கீல் மூலம் ஐகோர்ட்டின் முன்பு வாதிட்டு, அப்பாவி மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளுவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல. குடிமக்களிடம் காட்டும் பொல்லாத செயல்.

மின்சார சட்ட விதிகளை ஐகோர்ட்டில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அரசு நியாயப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. அரசே மேற்கோள் காட்டும் மின்சார சட்டம், 2003-ன்படியே மின் நுகர்வோருக்கு கொரோனா பேரிடரை ஒரு சிறப்பு நேர்வாக கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம்.

மின்சார சட்டத்தின்கீழ் இருக்கும் மின் நுகர்வோர் நலனை பாதுகாப்பது என்ற அடிப்படை கோட்பாட்டினை மனதில் வைத்து, ஏற்கனவே பேரிடருக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தின் அடிப்படையில் மின்கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும். ரீடிங் எடுக்காததால், முந்தைய மாதத்தில் மின் நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தை கழித்து பயனாளிகள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றாமல், அந்த பணத்திற்குரிய ரீடிங்குகளை கழித்து, மின் கட்டணத்தை மீண்டும் கணக்கிட்டு, மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவது, இனிவரும் நாட்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ஆகியவற்றிற்கும் மானியம் அளிக்கவோ அல்லது நீண்டகால தவணை முறையில் செலுத்தவோ ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சார சட்டத்திற்கு கட்டுப்பட்ட அமைப்பு என்பதாலும், இது கொரோனா பேரிடர் காலம் என்பதாலும், கட்டண சலுகையை மின் நுகர்வோருக்கு கொடுப்பதில் அரசுக்கு எவ்வித தடையும் இருக்கப்போவதில்லை. அதுவும் இயலாது என்றால், கொரோனா காலத்திற்குரிய அதாவது 31.7.2020 வரையிலான ஊரடங்கு காலத்திற்கு கேரள அரசு அறிவித்துள்ளது போல், வீட்டு பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story